ஆவணம் இன்றி பட்டா மாற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தர்ணா கடலூரில் பரபரப்பு


ஆவணம் இன்றி பட்டா மாற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தர்ணா  கடலூரில் பரபரப்பு
x

ஆவணம் இன்றி பட்டா மாற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது மனு அளிக்க தனது மனைவி மற்றும் மகள்களுடன் வந்த பண்ருட்டி அடுத்த சொரத்தூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (வயது 67) என்பவர் தனது குடும்பத்தினருடன், மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

உடனே அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அப்போது ராதாகிருஷ்ணன், எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் எனது தந்தை என்னுடைய மகன் மீது எழுதிய உயில் மூலமாக பட்டா மாற்றம் செய்வதற்கு பணம் கட்டியுள்ளேன். ஆனால் இதுவரை பட்டா மாற்றம் செய்யப்படவில்லை.

நடவடிக்கை

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிலர், அதிகாரிகளிடம் பணம் கொடுத்து, எவ்வித ஆவணமும் இல்லாமல் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஆவணம் இன்றி பட்டா மாற்றம் செய்து கொடுத்த தாசில்தார், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி, மனு அளித்தார்.

இதையடுத்து ராதாகிருஷ்ணன் அளித்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதனால் ராதாகிருஷ்ணன் தர்ணாவை கைவிட்டு, தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story