பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் பேட்டி


பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினரான தனலட்சுமி, வக்கீல்கள் முருகன், ஜெயம்பெருமாள் மற்றும் நான்சி, தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் தியாகராஜன், துணைச்செயலாளர் கல்லை ஜிந்தா ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் 3 ஆயிரம் பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் ஸ்டெர்லைட்டுக்கும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பல வதந்திகளால் தான் நிறுவனம் 4 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்பது விசாரணை அறிக்கை மூலமாக தெளிவாகியுள்ளது. எனவே தூத்துக்குடி மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தூத்துக்குடி நகரம் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி பெற மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.

சிலர் தூத்துக்குடி மக்களிடம் தவறான பிரசாரம், மூளைச்சலவை செய்து போராட்டத்தில் ஈடுபட வைத்து உள்ளனர். அடையாளம் காணமுடியாத அந்த 50 நபர்கள் யார்? என்பதை தமிழக அரசு கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story