குளச்சல் நகரசபை கூட்டத்தில் பங்கேற்காத ஆணையர் மீது நடவடிக்கை
குளச்சல் நகரசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
குளச்சல்,
குளச்சல் நகரசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
குளச்சல் நகரசபை கூட்டம்
குளச்சல் நகரசபை சாதாரண கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், மேலாளர் சக்திகுமார், என்ஜினீயர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
பனிக்குருசு (தி.மு.க.):-சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இறைச்சி கடைகளின் கழிவுகள் கொட்டில்பாடு சாலையோரம் வீசப்படுகிறது.
ஜான்சன் (தி.மு.க.)- கே.எஸ்.எஸ்.காலனியில் வரப்போகும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் புதியதா? அல்லது குளச்சல் பீச் சந்திப்பில் இயங்கும் சுகாதார நிலையம் கே.எஸ்.எஸ். காலனிக்கு இடம் மாறுகிறதா?
தலைவர்:- நவீன வசதியுடன் புதிதாக வருகிறது. குளச்சல் பீச் சந்திப்பில் உள்ள சுகாதார நிலையம் இடம் மாறாது.
தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை
ஷீலா ஜெயந்தி (தி.மு.க):- 5 கவுன்சிலர்கள் மீது நகராட்சி தூய்மை பணியாளர் அளித்த புகார் விவகாரம் தொடர்பாக கவுன்சிலர்கள் அளித்த மனு மீது எடுத்த நடவடிக்கை என்ன?
தலைவர்:- நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
ரமேஷ் (காங்.) :- அவரிடம் நாங்கள் கேட்டோம். இது ஆணையரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என கூறியுள்ளார்.
தலைவர்:- சம்பந்தப்பட்டவரிடம் வாபஸ் வாங்க கூறுகிறேன்.
(அப்போது சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2 கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.)
தலைவர்:- மண்டல இயக்குனரின் அதிகாரத்திற்குட்பட்டது. அவர் நடவடிக்கை எடுப்பார். (அந்த சமயத்தில் ஆணையரின் தூண்டுதல் பேரில் தான் தூய்மை பணியாளர் புகார் அளித்ததாக கவுன்சிலர் ரமேஷ் குற்றம்சாட்டினார்.)
ஆணையர் மீது...
ரகீம்:- இன்றைய கூட்டத்திற்கு ஆணையர் வராதது ஏன்?
மேலாளர்:- ஆணையர் கூகுள் மீட்டிங்கில் உள்ளார். அதனால் வரவில்லை.
ரகீம்:- அவர் தொடர்ந்து 3 கூட்டத்திற்கு வரவில்லை. அலுவலகத்திற்கு வந்தும், கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.
ஜான்சன்:- கூட்டத்தில் வராத ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணைத்தலைவர் - கவுன்சிலர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் தயங்குவது ஏன்?.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதனை தொடர்ந்து அஜெண்டா வாசிக்கப்பட்டது.
அப்போது ஜான்சன், ரகீம் குறுக்கிட்டு, சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர் மீது ஆணையரின் நடவடிக்கை முடிவு தெரிந்த பிறகு அஜெண்டா வாசிக்கலாம்.
எனினும் தலைவர், கூட்டம் முடிந்தது. அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என கூறியபடி சென்றார்.