ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில் உடற்பயிற்சி நிலையம், சமுதாய கூடம் கொண்டு வர நடவடிக்கை ஊராட்சி மன்ற தலைவர் தகவல்
ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில் உடற்பயிற்சி நிலையம், சமுதாய கூடம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் ரா.நித்தியா ராமதாஸ் தெரிவித்தார்.
ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில் உடற்பயிற்சி நிலையம், சமுதாய கூடம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் தகவல் ரா.நித்தியா ராமதாஸ் தெரிவித்தார்.
வளர்ச்சி பணிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்டுப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஆட்டுப்பாக்கம், மஞ்சம்பாடி, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த ரா.நித்தியா ராமதாஸ் உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
மஞ்சம்பாடி புதிய காலனி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்திலும், சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்திலும், அருந்ததியர் தெருவில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்திலும், ஆட்டுப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்திலும் சிமெண்டு சாலைகள், ஆட்டுப்பாக்கத்தில் ரூ.18 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மஞ்சம்பாடியில் ரூ.5 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு, 3 மழை நீர் சேகரிப்பு தொட்டி உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வகுப்பறை கட்டிடங்கள்
ஆட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.16 லட்சத்து 58 ஆயிரத்தில் சுற்றுச்சுவர், அதே பள்ளியில் ரூ.30½ லட்சம் மதிப்பிலும், மஞ்சம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30½ லட்சம் மதிப்பிலும் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
புதிய காலனி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்திலும், பழைய காலனியில் ரூ.51 ஆயிரத்திலும் சிமெண்டு சாலைகள், ஆட்டுப்பாக்கத்தில் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் பழுது பார்க்கும் பணி, புதிய காலனியில் ரூ.3 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு, புதிய காலனியில் குடிநீர் தொட்டியில் இருந்து தெரு வரை ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்திலும், மோட்டார் இருக்கும் இடத்திலிருந்து குடிநீர் தொட்டி வரை ரூ.98 ஆயிரம் மதிப்பிலும் பைப்லைன் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.
சமுதாய கூடம்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 30 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி நிலையம், மஞ்சம்பாடியில் நெற்களம், மகளிர் சுகாதார வளாகம், ஆட்டுப்பாக்கத்தில் சமுதாயக்கூடம், விஸ்வநாதபுரத்தில் சிமெண்டு சாலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஊராட்சியில் நிலத்தடி நீரை சேமிக்க ஏரி பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. ஊராட்சியை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
நான் தினமும் காலையில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் நேரடியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து வருகிறேன். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு சரி செய்து கொடுத்து வருகிறேன். ஊராட்சியில் குப்பைகள் சரியாக அள்ளப்படுகிறதா, குடிநீர் சரியான நேரத்திற்கு வழங்கப்படுகிறதா என்று நேரடியாக சென்று பார்த்து ஆய்வு செய்து வருகிறேன். மக்களுக்கு தங்கு, தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன். மின் விளக்குகள் இல்லாத பகுதியில் புதிய மின்விளக்கு பொருத்தவும், பழுதடைந்த மின்விளக்குகளை உடனுக்குடன் மாற்ற நடவடிக்கை எடுத்து உள்ளேன்.
விழிப்புணர்வு பிரசாரம்
ஊராட்சியில் காசநோய், எச்.ஐ.வி நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள், போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள், சீமை கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரத்ததான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆட்டுப்பாக்கம் ஊராட்சியை முதன்மையான சிறந்த ஊராட்சியாக மாற்ற ஊராட்சி துணைத்தலைவர் மு.சத்தியமூர்த்தி வார்டு உறுப்பினர்கள் எம்.தேவி மணிகண்டன், டி.கல்பனா தணிகாசலம், ஈ.சூரியா, செ.கோமதி செல்வம், ஏ.முரளி பெருமாள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
---
500 பிரதிகள் கட்டுரை