குடியாத்தம் நகருக்கு ரூ.13 கோடியில் கூடுதல் குடிநீர் கொண்டுவர நடவடிக்கை
குடியாத்தம் நகருக்கு ரூ.13 கோடியில் கூடுதல்குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
குடியாத்தம் நகருக்கு ரூ.13 கோடியில் கூடுதல்குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
ரூ.13 கோடியில் திட்டம்
குடியாத்தம் நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி. சிசில்தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் பேசும்போது குடியாத்தம் நகராட்சியில் 4 நாட்கள் முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கும் வகையில் அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளனர். அதனால் மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் பசுமத்தூரில் இருந்து குடியாத்தம் நகருக்கு கூடுதலாக குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும். செதுக்கரை பயணியர் விடுதி அருகே தரைத்தள ராட்சத குடிநீர் தொட்டி கட்டப்படும். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
தடை விதிக்க வேண்டும்
தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் நுகர்பொருள் வினியோகிஸ்தர்கள், சில்லறை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் குடியாத்தம் பகுதியில் வணிகம் மேற்கொள்ள தடை விதிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்ள வேண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து செதுக்கரை பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு திருமண மண்டபங்கள் உள்ளன. அதன் நடுவே மூன்றாவதாக ஒரு திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பார்க்கிங் வசதி இல்லை. கால்வாய் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. குடோன் என்ற பெயரில் அனுமதி பெறப்பட்டு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
நடவடிக்கை
குடியாத்தம் நகராட்சி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ள கூடுதலாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும், மழை காலம் வருவதால் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி கழிவு நீர் மற்றும் மழை நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய அதிகாரிகள் விதிமுறை மீறி கட்டப்படும் திருமண மண்டபம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், கூடுதலாக தூய்மை பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், நவீன்சங்கர், ஜாவித்அகமது, நளினி, லாவண்யா உள்பட பலர் பேசினார்கள்.