புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை
புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நாகையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
புதிய பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நாகையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை
நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கி அறைகளை திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து வேளாங்கண்ணியில் டிரைவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் ஓய்வெடுக்கும் வகையில் குளிரூட்டப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட நாகை போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறக்கப்பட்டுள்ளது.அதேபோல வேளாங்கண்ணியில் டிரைவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையமும் திறக்கப்பட்டுள்ளது. ரூ.62 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்களுக்கும், வெளியில் இருந்து வருகின்ற டிரைவர்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். போக்குவரத்து கழகத்தில் புதிய பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
1500 பஸ்களுக்கு புதிய பாடி
அதேபோல அடிச்சட்டங்கள் நல்ல முறையில் இருக்கின்ற பஸ்களில் வெளிப்புற பாடி பொருத்துவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. அதன்படி 1500 பஸ்களுக்கு புதிய பாடி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மழையில் ஒழுகும் பஸ்கள், பகுதி சேதமடைந்த பஸ்கள் குறித்து மழைக்காலங்களுக்கு முன்பாக ஆய்வு செய்யப்பட்டு அதனை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய அளவில் புதிய மாற்றத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியை கண்டு பா.ஜ.க. அஞ்சி போய், அமலாக்கத்துறையை வைத்து சோதனை நடத்தி வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் கலந்துகொண்ட பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் போதும், தற்போது பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தின் போதும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.
தி.மு.க.வை கண்டு....
தமிழகத்துக்கு எந்த தொடர்பும் இல்லாத மத்திய பிரதேசத்தில் தி.மு.க. தலைவரை விமர்சித்து மோடி பேசி உள்ளார். அதேபோல அந்தமான் நிக்கோபார் தீவுகள் சம்பந்தப்பட்ட ஒரு அரசு விழாவில் தி.மு.க. குறித்து விமர்சனம் செய்துள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது எந்த அளவுக்கு தி.மு.க.வையும், தி.மு.க. தலைவரையும் கண்டு மோடி அஞ்சி இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை பா.ஜ.க.வில் உள்ளவர்களே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. எனவே அவரது பேச்சை ஒரு பொருட்டாகவே ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.