நாகூர் தர்காவிற்கு புதிய யானை வாங்க நடவடிக்கை
நாகூர் தர்காவிற்கு புதிய யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
நாகூர்:
நாகூர் தர்காவிற்கு புதிய யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
நாகூர் தர்கா
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியது. இதனையடுத்து இங்கு நடந்து வரும் மராமத்து பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
அப்போது தர்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்ரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என நாகூர் தர்கா நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.
சிறப்பு பிரார்த்தனை
அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாகூர் ஆண்டவருக்கு மலர் போர்வை வழங்கி மலர் தூவி பிரார்த்தனை செய்தார்.
அப்போது தர்கா தலைமை மேனேஜிங் டிரஸ்டி செய்யது முஹம்மது காஜி ஹூசைன் சாஹிப் சிறப்பு துவா ஓதினார்.
மேலும் தர்காவில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்தன மரக்கட்டைகள்
தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு என தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தடைபட்ட ஹஜ் யாத்திரை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மீண்டும் தமிழகத்தில் இருந்து தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு விழாவிற்கு சந்தன மரக்கட்டைகள் தமிழக அரசு சார்பில் விலை இல்லாமல் வழங்கப்படும். இதேபோல் ஏர்வாடி தர்காவிற்கும் விலை இல்லாமல் சந்தன கட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
யானை வாங்க நடவடிக்கை
நாகூர் ஆண்டவர் தர்கா வழிபாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் புதிய யானை வாங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய யானை வாங்குவதற்கு தமிழக முதல்-அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் கலிபா சாஹிப் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் உடன் இருந்தனர்.