போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை


போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை
x

கூடலூர் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார்.

நகராட்சி கூட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கில் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) காந்திராஜ், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகராட்சியில் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க 15 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது உள்பட பல்வேறு தீர்மனங்கள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.

கவுன்சிலர் உஸ்மான்:- 15 தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என ஆய்வு செய்ய வேண்டும்.

ஆணையாளர் காந்திராஜ்:- மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு நகராட்சிகளிலும் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க தூய்மை பணி மேற்கொள்ள 15 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கால்நடைகளால் இடையூறு

வெண்ணிலா:- குடிநீர் குழாய்கள் பெரும்பாலான இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வினியோக ஊழியர்களிடம் தெரிவித்தும் ரப்பர் துண்டுகள் கொண்டு இழுத்துக் கட்டி விட்டு செல்கின்றனர். மேலும் இலவச பட்டா பெற்று குடியிருக்கும் மக்கள் வசிக்கும் இடங்களில் குடிநீர் முறையாக கிடைப்பது இல்லை. மேலும் வாய்க்கால் இல்லாததால் மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் தண்ணீர் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

அனூப்:- நகருக்குள் தெரு நாய்கள், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி வருகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெற்று உரிய நேரத்தில் கட்ட முடியாமல் காலாவதியானதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்.

கஞ்சா பழக்கம் அதிகரிப்பு

ஆணையாளர்:- மாவட்ட கமிட்டியிடம் அனுமதி பெற்று காலாவதியாகி இருந்தால் மீண்டும் அனுமதி வழங்கப்படும். இதேபோல் கால்நடை உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் 730 புதிய விளக்குகள் பொருத்த டெண்டர் விடப்பட உள்ளது.

துணைத் தலைவர் சிவராஜ்:- அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.15 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும். கவுன்சிலர் ஆபிதா பேகம்:- நகருக்குள் 8 வயது சிறுவர்கள் முதல் கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளது.

ஆணையாளர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அனைத்து கவுன்சிலர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Next Story