மேட்டூரில் இருந்து கள்ளக்குறிச்சி வரை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
மேட்டூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கள்ளக்குறிச்சி நகரமன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஷமிம்பானு அப்துல்ரசாக், நகராட்சி ஆணையாளர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகர மக்கள் தொகை கணக்கின்படி ரிஷிவந்தியம் மற்றும் மணலூர்பேட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தற்போது தினமும் 38 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வருகிற 2024-ம் ஆண்டில் தினமும் 63 லட்சத்து 10 ஆயிரம் லிட்டரும், 2039-ம் ஆண்டில் தினமும் 81 லட்சத்து 24 ஆயிரம் லிட்டரும், 2054-ம் ஆண்டில் தினமும் 99 லட்சத்து 38 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் மக்களுக்கு தேவை. ஆகவே நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சேலம் மாவட்டம் மேட்டூர் ஆற்றில் இருந்து கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் துருகம் சாலை உள்ள மயானத்தில் தியான மண்டபம் மற்றும் காத்திருக்கும் அறை, நடைபாதை, ஷெட் ஆகியவை அமைக்க ரூ.22 லட்சத்து 62 ஆயிரம் நிதியை ஒதுக்குவது. மேலும் 21 வார்டுகளிலும் தெரு பகுதியில் மழைநீர் வடிகாலுடன் பேவர் பிளாக் அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், தெருக்களில் மழைநீர் வடிகால் கட்டுதல், சமுதாய கூடம் அமைத்தல், சிமெண்டு சாலை உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.2 கோடியே
34 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நிதியை ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொறியாளர் முருகன், துப்பு ரவு ஆய்வாளர் சையத்காதர், மேலாளர் ஜெயராமன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து நகரமன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.