தமிழகத்தில் தட்டுப்பாடின்றி ஆவின் பால் வினியோகிக்க நடவடிக்கை
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி ஆவின் பால் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
மார்ஷல் நேசமணி நினைவு தினம்
குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 55-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் மார்ஷல் நேசமணி. அவருடன் பயணித்த பல்வேறு தலைவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியான தியாகிகள், தியாகச் செம்மல்களை வணங்குகிறேன்.
ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை பெருக்குவதுடன் பொதுமக்களுக்கு தரமான பால் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆவின் நஷ்டத்தில் இல்லை
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஆவின் விலையை குறைத்ததுடன் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 அதிகமாக வழங்கினார். தற்போது ஆவினில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் தட்டுப்பாடு இன்றி ஆவின் பால் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை.
மூலதனத்தை உயர்த்தி இதர செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பிரதமர் மோடி பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் மனோதங்கராஜ்," ஜனநாயக நாட்டில் யார், யாரைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அது அவரவர் அடிப்படை உரிமையாகும்" என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், பிரின்ஸ் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், மார்ஷல் நேசமணியின் உறவினர்கள் ரஞ்சித் அப்பலோஸ், தயாபதி நளதம், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படும்
முன்னதாக கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றதும் அறிவித்து விட்டேன்.
தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலக தரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம்.
மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. மாலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.