கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் சொத்துகள் முடக்க நடவடிக்கைபுதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் சொத்துகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பகலவன், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக, மதுரை இணை கமிஷனராக பணியாற்றி வந்த மோகன்ராஜ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று தச்சூரில் உள்ள அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், திருமேனி மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தி தரும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு ஏற்படாமல் பாதுகாக்கப்படும். முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி வாரந்தோறும் பொதுமக்கள் குறைகளை கேட்டு அவர்கள் கொடுக்கும் மனு மீது அதனை களையக்கூடிய வகையில் காவல்துறை முனைப்போடு செயல்படுத்துதல், காவல்துறை பணியாளர்களோடு இணைந்து பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் விசாரித்து அதற்கு நல்ல தீர்வு காணப்படும்.
கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாகன விபத்துகள் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வராயன்மலையில் சாராய விற்பனை, கடத்தல் போன்ற குற்றங்களை தடுத்து சாராயம் இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்களின் சொத்துகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி சம்பந்தமாக புகார் கொடுத்தால் கந்துவட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறுவதை நம்பி பொதுமக்கள் பணத்தை கட்டி ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.