ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை


ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 15 July 2023 2:18 AM IST (Updated: 15 July 2023 5:11 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சாவூர்

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பேட்டி

தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழாவை நேற்று காலை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இதுபோன்ற புத்தக திருவிழா பொதுவாக சென்னையில் மட்டும் தான் நடக்கும். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புத்தக திருவிழா சென்னையில் நடந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்

கடந்த ஆண்டு தஞ்சையில் நடந்த புத்தக திருவிழாவில் 104 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முறை 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்ட மக்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்து இருக்கிறது.

பொதுமக்கள் நீங்கள் மட்டும் தனியாக வரக்கூடாது. உங்களது உற்றார், உறவினர்கள், குடும்பத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து வர வேண்டும். சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சிறுவர்களையும் அழைத்து வர வேண்டும்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் இருக்கின்றன. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க இது பயனுள்ளதாக அமையும். நாளை (அதாவது இன்று) மதுரையில் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரில் உலகத்தில் உள்ள தமிழினமே எதிர்பார்க்கின்ற கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா நடக்கிறது. மக்களுடைய பொழுதுபோக்கு என்பது சினிமா பார்ப்பது, வீட்டில் இருந்து டி.வி. பார்ப்பது என்று இல்லாமல் உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் புத்தகத்தை வாங்கி படிக்கின்ற மாதிரியான விதம் வேறு எதிலும் இருக்க முடியாது.

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள்

டெட் தேர்வு, போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை தொடர்பாக ஏறத்தாழ 20 மணி நேரம் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வந்தவர்களிடம் பேசினோம். ஒவ்வொருவரும் கோரிக்கைகள் வைத்துள்ளனர். அதில் நியாயமான கோரிக்கைகளும் உள்ளன. கருணை அடிப்படையில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது.

மிக விரைவில் நிதித்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருடன் ஆசிரியர் சங்கங்கள் மூலமாக வந்த கோரிக்கைகள் குறித்து பேச உள்ளோம். அதில் எந்தெந்த கோரிக்கைகள் உடனடியாக செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய போகிறோம்.

பரிசு பெறும் வகையில் திட்டம்

தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, முதல் முறையாக ஒவ்வொரு பள்ளியிலும் 20 நிமிடங்கள் பள்ளி நூலகத்துக்கு மாணவர்கள் செல்லும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள் விரும்புகிற புத்தகத்தை வாங்கி படிக்கலாம்.

இதன் மூலம் பள்ளி சார்ந்த தமிழ் மன்றங்கள், மற்ற மன்றங்கள் மூலமாக நடைபெறுகிற கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கு பெறவும், மாநில அளவில் பரிசு பெறும் வகையிலும் திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story