மாலை நேரத்திலும் உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை
ராணிப்பேட்டையில் மாலை நேரத்திலும் உழவர்சந்தையை திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் மாலை நேரத்திலும் உழவர்சந்தையை திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
உழவர்சந்தை
இது தொடர்பாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் இடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க கடந்த 1999-ம் ஆண்டு உழவர் சந்தை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
உழவர் சந்தைகளின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும், நுகர்வோர்களுக்கு தரமான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்குவதும் ஆகும்.
தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு உழவர் சந்தைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள 30 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் தினந்தோறும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயனடைகின்றனர்.
அரசாணை
2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் உழவர் சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது உழவர் சந்தைகள் காலை 6 மணி முதல் நண்பகல் வரை இயங்கி வருகின்றன.
அரசு உத்தரவை தொடர்ந்து மாலை நேரங்களிலும் உழவர் சந்தைகள் முழு வீச்சில் செயல்படவும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவையும் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
அடையாள அட்டைகள்
அரசு ஆணைப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உழவர் சந்தை வீதம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை உழவர் சந்தை மட்டும் மாலை நேரத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை நேர உழவர் சந்தையானது மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
மாலை நேர உழவர் சந்தையில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ராணிப்பேட்டை, வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) சந்தித்து தனி அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மாலை நேர உழவர் சந்தை ஆரம்பித்த உடன் நுகர்வோர்கள் பொருட்களை வாங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.