ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
அரசியல் கட்சி தலைவர்களின் முற்றுகையால் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
அ.தி.மு.க. வழக்கு
இந்தநிலையில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நேர்மையாக தேர்தலை நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனிஜோசப் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உகந்தது அல்ல
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. வருகிற 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் வெறும் யூகங்களின் அடிப்படையில், தேர்தல் நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் வகையில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.
தேர்தலில் முறைகேடுகள் நடைபெறும் என மனுதாரர் அச்சம் தெரிவிக்க வேறு எந்தவொரு முக்கிய காரணமும் இல்லை. தொகுதியில் வசிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது எனக்கூறும் குற்றச்சாட்டுக்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை. இது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.
ரகசிய பட்டியல்
தேர்தல் சமயங்களில் முறைகேடுகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் தொகுதியில் வசிக்காதவர்களின் பட்டியல் தேர்தல் அலுவலரிடம் வழங்கப்பட்டு, அதை சரிபார்த்த பிறகே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
இறந்தவர்கள் யார்? தொகுதியில் வசிக்காதவர்கள் யார்? என்பது குறித்த பட்டியல்ரகசியமானது. அதை முன்கூட்டியே வெளியிட்டால் ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்புள்ளது என்பதால் அதை வெளியிட முடியாது. பூத் சிலிப்புகளை கட்சி ஏஜெண்டுகள் வினியோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
தேர்தல் அலுவலர்கள் மட்டுமே பூத் சிலிப்புகளை வினியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், வெப் காஸ்டிங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முறையாக நடத்த நடவடிக்கை
எந்த புகாருக்கும் இடம் கொடுக்காத வகையில் இந்த தேர்தலை அமைதியான முறையில் முறையாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தொகுதியில் 400-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த 34 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.