தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
கொரோனா தொற்று
முதியோர்களுக்கு உதவுவதற்காக 14567 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முதியோர் இல்லங்கள், தங்குமிடம், பகல்நேர பராமரிப்பு மையங்கள், பராமரிப்பாளர்கள், முதியோர் பயன்படுத்தும் உபகரனங்கள் கிடைக்கும் இடங்கள், முதியோர் பாதுகாப்பு சட்டங்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் முதியோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று கண்டறியப்படும் நபருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முககவசம் கட்டாயம்
பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம். வரும் நாட்களில் இது கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும். மக்கள் ஏற்கனவே விழிப்புணர்வுடன்தான் உள்ளனர். 4-ம் அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்கள் முககவசம் அணிந்து கொள்வார்கள். அரசு மருத்துவக்கல்லூரியில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்ய முடியும். தற்போது அறிகுறியுடன் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடக்கிறது. பரிசோதனை செய்து கொள்ள விரும்புகிறவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்யலாம். பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தேவைப்பட்டால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 98 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 93 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் தவணை தடுப்பூசி முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக போடப்படுகிறது. மற்றவர்கள் கட்டணம் செலுத்தி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் போட்டுக் கொள்ளலாம். இதே போன்று 15 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 12 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 63 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதியுதவி
முன்னதாக மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளையும், நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் வசித்து வந்த 2 பேருக்கு மாற்று இடத்தில் பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து முதியோருக்கான கட்டணமில்லா உதவி தொலைசி எண் 14567-ஐ மாவட்ட கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிறிஸ்டி பாய், மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.