நூலகங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை-சட்டமன்ற நூலக குழு தலைவர் தகவல்


நூலகங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை-சட்டமன்ற நூலக குழு தலைவர் தகவல்
x

நூலகங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக’ சட்டமன்ற நூலக குழு தலைவர் எஸ்.சுதர்சனம் தெரிவித்தார்.

திருநெல்வேலி

'நூலகங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக' சட்டமன்ற நூலக குழு தலைவர் எஸ்.சுதர்சனம் தெரிவித்தார்.

சட்டமன்ற நூலக குழு தலைவர் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற நூலக குழு தலைவர் எஸ்.சுதர்சனம் தலைமையில், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழு உறுப்பினர்கள் மதுரவாயல் எம்.எல்.ஏ. கணபதி, பெரியகுளம் எம்.எல்.ஏ. கே.எஸ்.சரவணகுமார், முசிறி எம்.எல்.ஏ. ந.தியாகராஜன், துறையூர் எம்.எல்.ஏ. செ.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், நூலகம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சி மணிமண்டபத்தை பார்வையிட்ட குழுவினர், அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிடத்தையும் பார்வையிட்டனார்.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழு தலைவர் எஸ்.சுதர்சனம் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு சட்டமன்ற நூலக குழு சார்பில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நூலகங்களை பார்வையிட்டோம். வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள நூலகம், அருகில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவுசார் மையத்தை பார்வையிட்டோம்.

இந்த நூலகப்பணி ஓரிரு மாதங்களில் முடிவடைந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் தயார் செய்யப்பட இருக்கிறது.

நெல்லை மாவட்ட மைய நூலகத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 141 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவிலான ஸ்மார்ட் போர்டு, தேர்வுக்கு தயார் செய்வதற்கான புத்தகங்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்தனர். அவற்றை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

என்.ஜி.ஓ. காலனி கிளை நூலகம், கங்கைகொண்டான் கிளை நூலகம் ஆய்வு செய்யப்பட்டது. இங்கும் நூலக உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

நூலகங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழுவால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் மற்றும் நூலகத்துறையினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற நூலக குழு ஆய்வுக்கூட்டம் அதன் தலைவர் சுதர்சனம் தலைமையில் நடந்தது.


Next Story