பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்ய நடவடிக்கை
விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
பங்குனி பொங்கல்
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழாவும் ஒன்றாகும்.. இந்த திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 2-ந் தேதி பங்குனி பொங்கலும், 3-ந் தேதி அக்னிச்சட்டி எடுக்கும் விழாவும் நடைபெறவுள்ளது. விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்.
இதனால் நகரில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதி
நகரில் நவீன நடமாடும் டாய்லெட் மூலம் கழிவறை வசதி, குடிநீர் வசதி, தூய்மை பணி ஆகியவற்றை மேற்கொள்ள விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை அருகில் உள்ள பள்ளி வளாகங்களில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் தடையில்லா மின்சார வினியோகமும் உறுதி செய்யப்பட வேண்டும். கொடியேற்றத்தில் இருந்து பொங்கல் வரை அதிகாலையில் பெண்கள் கோவிலுக்கு தண்ணீர் ஊற்றச் செல்லும் நிலை உள்ளதால் அதிகாலையில் அனைத்து தெருக்களிலும் மின்விளக்கு வசதி இருப்பதை உறுதி செய்வதுடன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
கோவிலை சுற்றி குறிப்பிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ்வசதி செய்யப்படுவதுடன் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
அத்துடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா சிறப்பாக நடைபெற தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.