வேலூர் லாங்குபஜாரில் சென்டர் மீடியன் அகற்ற நடவடிக்கை
போக்குவரத்து நெரிசலை குறைக்க வேலூர் லாங்குபஜாரில் சென்டர் மீடியன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க வேலூர் லாங்குபஜாரில் சென்டர் மீடியன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது வேலூர் நகரில் மண்டிவீதி, லாங்கு பஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் நேற்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் லூர்துசாமி உள்பட அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைக்காரர்கள் பலர் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். அவற்றை அகற்ற கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த பொருட்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து பழைய மீன் மார்க்கெட் பகுதியில் அவர்கள் ஆய்வு செய்தனர்.
சென்டர் மீடியன்
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-
வேலூர் மண்டிவீதி, கிருபானந்த வாரியார் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விரைவில் குறிப்பிட்ட அளவு சென்டர் மீடியன் அகற்றப்படும். மேலும் வியாபாரிகள் சார்பில் கழிவறை வசதி கேட்டுள்ளளனர். அந்த வசதி செய்து கொடுக்கப்படும். மேலும் ஏராளமான மக்கள் மற்றும் வியாபாரிகள் வருவதால் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து மல்டி கார் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.
மேலும் பழ வியாபாரிகள் கடைகளை பழைய மீன் மார்க்கெட் பகுதியில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் அதிக வாடகை உள்ளதாக தெரிவித்தனர். எனவே வாடகை கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.