பழைய காவிரி இரும்பு பாலத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை
பழைய காவிரி இரும்பு பாலத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி பாலம் பராமரிப்பு
திருச்சி மாநகரம்-ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976-ம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள இந்த பாலம் பழுதடைந்ததால், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அந்த வழியாக இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அவை மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
போக்குவரத்துக்கு தடை
இந்தநிலையில் பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சி ஓயாமரி சாலை மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புது காவிரி பாலம், சஞ்சீவி நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களும் இந்த வழியாக செல்வதால் கடந்த ஒரு வாரமாக புது காவிரி பாலம் பகுதியில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையில் நின்று மெதுவாக சென்று வருகின்றன. காலை, மாலை வேளைகளில் ஒரு வாகனம் அந்த பாலத்தை கடந்து செல்ல அரை மணி நேரம் வரை ஆகிறது.
3 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை இருப்பதாலும், போக்குவரத்து நெரிசலாலும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வருகிறார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த நிலையில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் அருகே உள்ள பழைய இரும்பு பாலத்தில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த இரும்பு பாலமானது 1,754-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு கடந்த 1,929-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டு 1,976-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் இந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் மூடப்பட்டது.
தற்போது இந்த பாலத்தின் ஒருபுறத்தில் திருவெறும்பூருக்கு செல்லும் குடிநீர் குழாயும், மறுபுறம் கழிவுநீர் குழாயும் செல்வதால் 2 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் 3 கிலோமீட்டருக்கு மேல் சுற்றிச்செல்வதை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பழைய இரும்பு பாலத்தை மீண்டும் திறந்து, இருசக்கர வாகனங்கள் மட்டுமாவது செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இரும்பு பாலத்தை திறக்க நடவடிக்கை
இந்தநிலையில் பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால், ஒரு வழிப்பாதையில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்கலாமா? அல்லது இருவழியில் அனுமதிக்கலாமா? என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், போலீசாரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று பழைய காவிரி இரும்பு பாலத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் அந்த பாலத்தில் முளைத்திருந்த புற்களை வெட்டி, பாலத்தை சுத்தப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாலத்தை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்தனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இந்த இரும்பு பாலத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சிக்கு இருசக்கர வாகனங்கள் மட்டும் வரும் வகையில் ஒரு வழி பாதையாக பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாலத்தை திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றனர்.