யானைகள் நடமாடும் பகுதியில் ரெயில்களை மெதுவாக இயக்க நடவடிக்கை


யானைகள் நடமாடும் பகுதியில் ரெயில்களை மெதுவாக இயக்க நடவடிக்கை
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 யானைகள் 5 நாட்களாக முகாமிட்டுள்ளதால் அந்தப்பகுதியில் ரெயில்களை மெதுவாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

யானைகள் நடமாட்டம்

கர்நாடக வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள் கடந்த சனிக்கிழமை முதல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதியில் முகாமிட்டன. பின்னர் தண்ணீர் பந்தல் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஆத்தூர் குப்பம், ஜங்கலாபுரம், எல்லப்பள்ளி, சோமநாயக்கன்பட்டி ரெயில் தண்டவாளங்களை கடந்து சென்று திரியாலம் ஏரியில் அன்று இரவு முகாமிட்டது.

பின்னர் வாணியம்பாடி- சேலம் சாலையை கடந்து சின்னகவுண்டனூர் பகுதிக்கு சென்று ஊசி நாட்டான் வட்டம் பகுதியில் ஏலகிரி மலை அடிவாரத்தில் முகாமிட்டன. நேற்று முன்தினம் ஏலகிரி கிராமம் மயில் பாறை பகுதியில் இருந்து பால்னங்குப்பம் பகுதி வழியாக சென்று ஏலகிரி மலை அடிவாரத்தில் அன்று இரவு முகாமிட்டன.

5-வது நாளாக...

5-வது நாளான நேற்று அதிகாலை வெங்காயப்பள்ளி பகுதியில் இருந்து அண்ணாண்டப்பட்டி வழியாக பாச்சல் ஊராட்சி பகுதியில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று குளித்தன. இதனை அப்பகுதி பொது மக்கள் திரளாக சென்று வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தனர்.

யானையை பார்க்க கூட்டம் கூடியதால் நடமாடும் டீ வியாபாரம் ஜோராக நடைபெற்றது யானைகளை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கற்கள் வீசி விரட்ட முயன்றனர். இதனால் யானைகள் கடும் ஆக்ரோஷத்துடன் பிளிறியது. ஆனாலும் இளைஞர்கள் சிலர் யானைகளின் அருகே சென்று தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக யானை முகாமிட்டுள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

மெதுவாக இயக்க..

இந்த நிலையில் பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுசெய்தார். அப்போது எந்த ஒரு பொருட்களையும் யானை மீது எரியாமல் இருக்க வேண்டும். சாலைகளில் பயணிக்கும்போது முகப்பு விளக்குகளை எரிய விடாமல் இருக்க வேண்டும். திருப்பத்தூர் நகருக்கு யானை திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. சாலைகளிலும் வரலாம் ஆகவே பயணிகள் சாலைகளில் பயணிக்கும் போது நிதானமாக செல்ல வேண்டும்.

ரெயில்வே துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அனைத்து ரெயில்களும் மிக மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். வருவாய்த் துறை மூலமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடத்த ஐந்து தினங்களாக வளத்துறையினர் யானையை பின்தொடர்ந்து வருகின்றார்கள் என்றார்.

வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கிடிஜாலா, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், வனச்சரக அலுவலர் பிரபு, காவல்துறை, வனத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story