65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க நடவடிக்கை
நடப்பு ஆண்டு சொர்ணவாரி பருவத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக வேளாண்மை துணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டு சொர்ணவாரி பருவத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக வேளாண்மை துணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்தார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் மாரியப்பன் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்ற ஆண்டு 2021-22 காரீப் விற்பனை பருவம் சொர்ணவாரி பருவத்தில் 32 ஆயிரத்து 558 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
அப்பருவத்திற்கு ஆரம்ப கட்டமாக 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு 7 ஆயிரத்து 969 விவசாயிகளிடம் இருந்து 25 ஆயித்து 448 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
மேலும் சம்பா நவரை பருவத்தில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 562 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அப்பருவத்திற்கு 94 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு 31 ஆயிரத்து 935 விவசாயிகளிடம் இருந்து 1 லட்சத்து 37 ஆயிரத்து 807 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
நடப்பு 2022-23 காரீப் விற்பனை பருவம், சொர்ணவாரி பருவத்தில் 27 ஆயிரத்து 63 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 65 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி உதவி திட்டத்தில் பயனடைந்து வரும் விவசாயிகளில் செல்போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவு செய்யாதவர்கள் இந்த மாத இறுதிக்குள் அருகில் உள்ள பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு அவற்றை பதிவு செய்திட வேண்டும்.
வேளாண் வளர்ச்சி திட்டம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து 122 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் 2022-23-ம் ஆண்டிற்கு 223 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு 35 தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.