ஆனைக்குட்டம் அணையில் நீரை தேக்கி வைக்க நடவடிக்கை
‘ஷட்டரை’ சீரமைத்து ஆனைக்குட்டம் அணையில் நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
'ஷட்டரை' சீரமைத்து ஆனைக்குட்டம் அணையில் நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனைக்குட்டம் அணை
விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் அணை விருதுநகருக்கு குடிநீர் ஆதாரமாகவும், அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தரவும் கடந்த 1990-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணையில் தொடக்கத்தில் இருந்தே 'ஷட்டர்' பழுதால் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
கடந்த காலங்களில் விருதுநகருக்கு வந்து சென்ற சட்டப்பேரவை குழுக்களிடம் இதுபற்றி முறையிட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் இதுகுறித்து விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் பலமுறை வலியுறுத்தி பேசியும் அரசு செவிசாய்க்கவில்லை.
நிதி ஒதுக்கீடு
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளதாக தெரிவித்தும் பலன் ஏற்படவில்லை. ஏற்கனவே கலெக்டர் பொறுப்பில் இருந்த மேகநாத ரெட்டி தற்போது மாறுதலாகி செல்லும் நிலையில் இதற்கான நடவடிக்கை எடுத்தும் 'ஷட்டர்' சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
இந்தநிலையில் ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் நீர் கசிவை தடுப்பதற்காக பொதுப்பணி துறையினர் தூத்துக்குடியில் இருந்து முத்து குளிக்கும் வீரர்கள் மூலம் மணல் மூடைகளால் நீர்க்கசிவை தடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் உரிய பலன் ஏற்படுவதில்லை. மேலும் அணையில் தண்ணீர் குறைவதால் அணையை ஒட்டி உள்ள உறை கிணறுகளில் குடிநீர் குடிக்க தகுதி இல்லாததாகி விட்டது.
வலியுறுத்தல்
தற்போது அணை முற்றிலுமாக வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.
பெரும் பொருட்செலவிலான ஆனைக்குட்டம் அணை பயன்பாடில்லாமல் வறண்டு கிடக்கும் நிலை உள்ளதால் பொதுப்பணித்துறையினர் இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து அணையின் 'ஷட்டரை' சீரமைத்து தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.