சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை-கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை


சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை-கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
x

சேலம் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சினால், விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.

சேலம்

ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும், கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோதனைச்சாவடி

சேலம் மாவட்டத்தில் மெத்தனால், எத்தனால் பயன்படுத்த உரிமம் பெற்றுள்ளவர்கள், தங்களது வரம்பிற்கு உட்பட்டு மட்டுமே அவற்றை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை முறையாக கண்காணிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, பச்சமலை மற்றும் கொளத்தூர் பகுதிகளில் சாராய விற்பனையை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள நவம்பட்டி, கும்பப்பாடி மற்றும் தும்மங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஊரக காவல் துறை மற்றும் வனத்துறை சார்பில் புதிதாக சோதனைச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்த தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாராயத்தை ஒழிக்க...

மேலும், உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் குழு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாராயத்தை ஒழிப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

இதில் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் நர்மதாதேவி, போலீஸ் துணை கமிஷனர்கள் கவுதம் கோயல், லாவண்யா, குணசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன், உதவி கலெக்டர்கள் மாறன், தணிகாச்சலம், சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story