தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை
குடியாத்தம் நகரில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகரமன்ற கூட்டத்தில் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.
நகரமன்ற கூட்டம்
குடியாத்தம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, ஆணையாளர் எம்.மங்கையர்க்கரசன், பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும் மகளிர் உரிமைத்தொகை, மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்து நகரமன்ற உறுப்பினர்களுக்கு தலைவர் சவுந்தர்ராஜன் மூலமாக, உறுப்பினர் கவிதா இனிப்பு வழங்கினார்.
முறைகேடாக குடிநீர் இணைப்பு
நகரமன்ற உறுப்பினர்கள் ஆட்டோமோகன், நவீன்சங்கர் ஆகியோர் பேசுகையில் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அலுவலகம் கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நகரமன்ற தலைவர், ஆணையாளருக்கு தெரிவிக்காமல் ஆய்வு செய்துள்ளனர். பல வார்டுகளில் முறைகேடாக நூற்றுக்கணக்கான குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. அதனை உடனடியாக கணக்கெடுத்து முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட் பெற்றுக் கொண்டு இணைப்புகள் வழங்கினால் நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் வரும்.
அதற்கு பதில் அளித்த நகரமன்ற தலைவர் இது குறித்து எனக்கோ, ஆணையாளருக்கோ எந்தவித தகவலும் வரவில்லை. நகரமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால்தான் நகராட்சி இடத்தில் கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்தார்.
துணைத் தலைவர்:- எங்கள் பகுதியில் வெறிநாய்கள் சிறுவர்களை கடித்துள்ளது. நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்டபாணி:- நகராட்சியில் வரிவிதிப்புக்கு கட்டாயம் பணம் வாங்குகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி ஆணையாளர்:- எழுத்து மூலமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்து, பிடித்த இடத்திலேயே விட நடவடிக்கை எடுக்கப்படும்.
சலவைத்துறை
இந்துமதி:- பழைய ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள ஒரு இனிப்பு கடையில் இருந்து கழிவுகள் கால்வாயில் கலந்து கண்ணகி தெரு வழியாக வந்து துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.அரசு:- குடியாத்தம் நகரை சுற்றி 200-க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள், சிக்கன் பக்கோடா கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் சுகாதாரமற்ற இறைச்சியும், பழைய இறைச்சியும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றது.
கன்னிகாபரமேஸ்வரி:- சுண்ணாம்புபேட்டையில் உள்ள சலவைத்துறையை அகற்ற உள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.
நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து பேசிய நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் குடியாத்தம் நகரில் உள்ள பல கடைகளின் பெயர்பலகைகள் தமிழில் இல்லாமல், ஆங்கிலத்தில் உள்ளது. மூன்று மாதத்திற்குள் அனைத்து பெயர்ப்பலகைகளிலும் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சலவை தொழிலாளர்களுக்கு சுண்ணாம்பு பேட்டை சுடுகாடு அருகே சலவைத்துறை கட்டித்தரப்படும். ஆற்றில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வரி விதிப்பிற்கு பணம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதி இன்றி முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.