மாணவனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்துகொடுத்தவர்கள் மீது நடவடிக்கை
களியக்காவிளை அருகே மாணவனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து குடிக்க கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்தனர்
நாகர்கோவில்:
களியக்காவிளை அருகே மாணவனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து குடிக்க கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
குளிர்பானத்தில் திராவகம்
களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 11 வயது மகன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மதியம் பள்ளியில் இருந்து மாணவன் வீடு திரும்பும் போது, அதே பள்ளிச் சீருடையில் வந்த மற்றொருமாணவன் குளிர்பானம் ஒன்றை கொடுத்துள்ளான். அதனை வாங்கி குடித்த மாணவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் மாணவனை பெற்றோர் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவன் குடித்த குளிர்பானத்தில் திராவகம் கலந்திருப்பதாக கூறினர். இதனால் சிறுவனின் சிறுநீரகங்கள் செயல் இழந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை
இதுதொடர்பாக களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது மாணவனின் பெற்றோர் கண்ணீா் மல்க மாவட்ட கலெக்டர் அரவிந்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்களது மகனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு, எங்கள் மகனுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ செலவு
எங்களது குடும்பத்தின் சூழ்நிலை கருதி மகனின் மருத்துவ செலவிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலும் மனு அளித்தனர்.