ஏரியா சபை கூட்டங்களில் அரசு அதிகாரிகளும் பங்கேற்க நடவடிக்கை; மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் தகவல்
‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடைபெறும் ஏரியா சபை கூட்டங்களில் அரசு அதிகாரிகளும் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்', என மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. மன்ற கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மு.மகேஷ் குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி மன்ற கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கேள்வி நேரமும், நேரமில்லா நேரமும் அடுத்தடுத்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சினைகள் சார்ந்து கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு மேயர் பிரியா அளித்த பதில்களும் வருமாறு:-
ஏரியா சபை கூட்டங்களில்...
கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் (தி.மு.க.) :- சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் வழக்கை காரணம் காட்டி லட்சக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளன. அதேபோல தனியார் தொலைதொடர்பு கோபுரங்கள் சார்பிலும் பல கோடி ரூபாய் சொத்துவரி நிலுவையில் இருக்கிறது. அதேபோல மண்டலங்கள், துறைகளில் இருக்கும் தணிக்கை ஆய்வாளர்கள் எங்களிடம் தகவல் கூற மறுக்கிறார்கள். எனவே பிரச்சினைகளை களையும் வகையில் ஏரியா சபை கூட்டங்களில் மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும். இதற்காக மாநகராட்சி விதிகளில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட செய்யவேண்டும்.
மேயர் பிரியா:- நிலுவை வரிகளை வசூலிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல ஏரியா சபை கூட்டங்களில் மின்சாரம், போக்குவரத்து, வருவாய், உணவுபொருள் வழங்கல் துறை என பல்துறை அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் உரிய அனுமதி கோரி அரசுக்கு கருத்துறு அனுப்பி வைக்கப்படும்.
'நமக்கு நாமே' திட்ட நிதியின்கீழ்...
ஆர்.ஜி.ராஜசேகர் (அ.தி.மு.க.) :- 21-வது வார்டு அம்பேத்கர் தெருவில் இடியும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடம் அகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்படுமா?
மேயர் பிரியா:- இந்த பணிக்காக ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்ட நிதியின்கீழ் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
ப.சுப்பிரமணி (ம.தி.மு.க.):- ஜாபர்கான்பேட்டை ஜோதிராமலிங்கநகரில் உள்ள பொது கழிப்பறை பழுதடைந்து இருக்கிறது, சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
மேயர் பிரியா:- அந்த பழைய கழிப்பறை கட்டிடத்தை இடித்து, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் புதிய கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உரிய பரிசீலனை
சுகன்யா செல்வம் (காங்கிரஸ்) :- கில்நகர் பூங்கா சுற்றுச்சுவர் சிதிலமடைந்து காணப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்படுமா?
மேயர் பிரியா:- பழுதடைந்த சுற்றுச்சுவர் பகுதியை இடித்து புதிதாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உமா ஆனந்தன் (பா.ஜ.க.) :- சென்னை மாநகராட்சி திட்டங்கள் குறித்தும், புள்ளி விவரங்கள் குறித்தும் அறிய ஏதுவாக மாநகராட்சி இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள கவுன்சிலர்களுக்கு லாகின், பாஸ்வேர்டு வழங்கவேண்டும்...
மேயர் பிரியா:- அதுதொடர்பாக உரிய பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கிரிதரன் (அ.ம.மு.க.) :- கவுன்சிலர்களுக்கு அதிவேக இணைய வசதி கொண்ட சிம்கார்டு பொருத்தப்பட்ட செல்போன் வழங்கப்படுமா?
மேயர் பிரியா:- நல்ல தகவல் வரும்.
சுடுகாட்டில் ஆய்வு
ஆர்.ஜெயராமன் (இந்திய கம்யூனிஸ்டு) :- எனது வார்டில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்...
மேயர் பிரியா:- பழைய பள்ளி கட்டிடம் அகற்றப்பட்டு 2 தளம் கொண்ட புதிய கட்டிடம் கட்ட ரூ.2.62 கோடியில் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ்குமார் (வார்டு -182) பேசுகையில், 'எனது வார்டில் கழிவுநீர் பிரச்சினை உள்பட பல பிரச்சினைகள் இருக்கின்றன. 7 வருடங்களாக பராமரிப்பும் கிடையாது. தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அம்மா உணவக கட்டிடம் பழுதடைந்து, பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது', என்று பேசினார்.
அப்போது வார்டு குழு தலைவர் ரவிச்சந்திரன் பேசும்போது, சதீஷ்குமார் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். மேலும் சில தி.மு.க. கவுன்சிலர்களும் எழுந்து குரல் கொடுத்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனை கண்டித்து சதீஷ்குமார் உள்பட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
'கவுன்சிலர்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை'
அதிகாரிகளுக்கு, மேயர் பிரியா உத்தரவு
மன்ற கூட்டத்தின்போது மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும், தகவல்களை முறையாக தெரிவிப்பதில்லை என்றும் கவுன்சிலர்கள் சிலர் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து மேயர் பிரியா பேசும்போது, 'இதுபோன்ற சிறிய விஷயங்களை எல்லாம் மண்டல அளவிலேயே சரிசெய்திட வேண்டும். இதை மன்ற கூட்டத்தில் எடுத்து வருவதை தவிருங்கள். அதேபோல அதிகாரிகளும், கவுன்சிலர்களுக்கு உறுதுணையாக இருங்கள். கவுன்சிலர்கள் கூறும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது தான் 'சிங்கார சென்னை 2.0' என்ற இலக்கை நாம் அடைய முடியும். எனவே ஒற்றுமையாக இருந்து பணியாற்றுங்கள்', என்று கூறினார்.
இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஒருசேர மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.
கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் நேற்றைய மன்றகூட்டத்தின் போது புதிய கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு, மேயர் பிரியா முதல் கவுன்சிலர்கள் வரை அனைவருமே பாராட்டு தெரிவித்தனர்.
'பெருங்குடி குப்பை கிடங்குக்கு விடிவு'
துணை மேயர் மகேஷ்குமார் தகவல்
மன்றக்கூட்டத்தில் மேயர் பிரியா இல்லாத நேரத்தில் துணை மேயர் மகேஷ்குமார் அவையை வழிநடத்தினார். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் கோவிந்தசாமி (193) பேசும்போது, பெருங்குடி குப்பை கிடங்கால் துரைப்பாக்கம், சாய்நகர் பகுதி மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகுகிறார்கள். கொசுத்தொல்லையும் மிகுதியாக இருக்கிறது என பேசினார்.
அப்போது துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், 'பெருங்குடி குப்பை கிடங்கில் பையோ மைனிங் செயல்பாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவில் இந்த பகுதியில் எக்கோ பார்க் வர இருக்கிறது. அது செயல்பாட்டுக்கு வரும்போது பெருங்குடி குப்பை கிடங்குக்கு புது விடிவு ஏற்படும். அப்பகுதியே பொதுப்பொலிவு பெரும்', என்றார்.