டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க நடவடிக்கை அமைச்சர் தகவல்
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறந்த செயல்திறனுடன் செயல்படும் ஆஸ்பத்திரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரத்து 920 அரசு ஆஸ்பத்திரிகள், 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகளில் தினசரி காய்ச்சல் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, கிராமம் மற்றும் நகரங்கள் வாரியாக பட்டியல் தயார் செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு நோய்த்தடுப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சிறந்த ஆஸ்பத்திரிகளுக்கு சான்றிதழ்
2021-22-ம் ஆண்டில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாநில அளவில் சிறந்த செயல்திறனுடன் செயல்பட்ட திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ்மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலர் அமுதா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் ப.செந்தில்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தேசிய சுகாதார குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் டாக்டர் உமா, தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழக இயக்குநர் தீபக்ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.