நடிகர் தனுஷ் வழக்கு ஆவணங்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் - இறுதி விசாரணை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
நடிகர் தனுஷ் வழக்கு ஆவணங்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இறுதி விசாரணை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதி கதிரேசன்-மீனாட்சி. இவர்கள், கடந்த 2015-ம் ஆண்டு மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு வழக்கில், நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்று அறிவிக்குமாறு கோரி இருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தனுஷ் யாருடைய மகன் என்பதை உறுதிப்படுத்த அவரது பிறப்பு சான்றிதழை இரு தரப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இரு தரப்பினரும் தங்களிடம் இருந்த பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்தனர்.
பின்னர் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு 2017-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கதிரேசன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தனுஷ் வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் கோர்ட்டில் இருந்த நடிகர் தனுஷ் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்காக, விசாரணையை வருகிற 5-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.