இரவு பாடசாலை தொடங்குகிறார் நடிகர் விஜய்..!
நடிகர் விஜய் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 15-ம் தேதி கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலையை தொடங்கவும் அதற்கு படிப்பகம், பயிலகம் கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை இத்திட்டத்துக்கு வைக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 15-ம் தேதி இலவச பாட சாலை திட்டம் தொடங்கப்படும் என்றும் அதற்கான இடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதியில் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாடசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாடசாலைக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்குகிறார்.