கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8.25 லட்சம் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்-கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள், தங்களின் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
பாராட்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியினை 100 சதவீதம் செய்து முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆதார் எண் இணைக்கும் பணி
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களை மேம்படுத்தும் பொருட்டு, வாக்காளர்கள் தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்திட உத்திரவிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
வாக்காளர் தங்கள் ஆதார் எண்ணை www.nvsp.in என்ற இணையதளம் மூலமோ அல்லது Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமோ வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து இணைத்து கொள்ளலாம். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவம் 6பி-ஐ வாக்காளர்களிடம் பெற்று அதனை கருடா கைபேசி செயலி வாயிலாக உள்ளீடு செய்து வருகின்றனர்.
51.16 சதவீத வாக்காளர்கள்
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் 53.4 சதவீத வாக்காளர்களும், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் 58.36 சதவீத வாக்காளர்களும், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 48 சதவீத வாக்காளர்களும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் 52.13 சதவீத வாக்காளர்களும், ஒசூர் சட்டமன்ற தொகுதியில் 44.75 சதவீத வாக்காளர்களும், தளி சட்டமன்ற தொகுதியில் 53.27 சதவீத வாக்காளர்களும் என மொத்தம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 16 லட்சத்து 13 ஆயிரத்து 559 வாக்காளர்களில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 454 வாக்காளர்கள், அதாவது 51.16 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர்பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்களை செம்மைப்படுத்தும் இந்த பணியை 5 வாக்குச்சாவடி அலுவலர்கள் 100 சதவீதம் செய்து முடித்துள்ளனர். இதேபோல் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தங்கள் பணியை விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டு சான்றிதழ்
தொடர்ந்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 100 சதவீதம் இணைத்திட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மருதராஜன், கோபால், ரீட்டாமேரி, கவிதா, மகேஷ் ஆகியோருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் பாலகுரு, தேர்தல் தாசில்தார் ஜெய்சங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.