கிராமங்கள் வளர்ச்சி அடைய கூடுதல் நிதி ஒதுக்கீடு


கிராமங்கள் வளர்ச்சி அடைய கூடுதல் நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிராமங்கள் வளர்ச்சி அடைய கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம்-கடலூர் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம்- கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மணிக்கண்ணன், சபாராஜேந்திரன் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

கூடுதல் நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு முதல்-அமைச்சர், கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற வகையில் மாநிலத்தின் வருவாயில் ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார். குறைவான மக்கள் தொகை இருந்தாலும் ஊராட்சியின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 51 சதவீதம் ஊராட்சிகளுக்கும், 49 சதவீதம் நகராட்சிகளுக்கும் நிதி வழங்கியுள்ளார்கள். உள்ளாட்சித்துறையின் சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக விவசாயத்திற்கு பயன்படுத்துகின்ற வாய்க்கால்கள் உள்பட அனைத்து சிறிய வாய்க்கால்களும் வேளாண்மைத்துறையின் சார்பில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

குடிநீர் தொட்டிக்கு நிதி

தமிழ்நாட்டில் 80 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரம் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 15 நாட்களுக்குள் 40 ஆயிரம் கிராமமாக உயர்த்தி பணிகள் நடைபெற ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிகளின் எல்லை விரிவாக்கம் அமைந்துள்ளதால் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைக்காக கட்டப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உயரத்தை 12 மீட்டர் அளவில் உயர்த்தி கட்ட வேண்டும். பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதியதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர தேவையான நிதியை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஊராட்சியின் வளர்ச்சிக்கு வழிவகுக்க...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த உரிய ஆய்வுக்கூட்டம் விரைந்து நடத்தி அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்திக்கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்கள் பணியை சிறப்பாக மேற்கொள்ள அரசால் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். எனவே ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் பணியை சிறப்பான முறையில் மேற்கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு வழிவகுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story