ரூ.71½ லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம்-கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.71½ லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.71½ லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா
வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.71½ லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடிநீர் கிடைக்க துரித நடவடிக்கை
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
நமது கலெக்டர் ஸ்ரீவைகுண்டம் அணைபகுதி பொன்னன்குறிச்சியில் உள்ள ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளை சரிசெய்து சீராக குடிநீர் கிடைக்க மிக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் ஆலோசனை நடத்தினார்கள். ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் தண்ணீர் உறைகிணற்றுக்கு செல்லாமல் உள்ளன. இதை சரிசெய்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று பொதுமக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு
மேலும் ஆதிச்சநல்லூரில் முதல் முறையாக நடந்த அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளது. அதை மீட்க தமிழக முதல்வர், அமைச்சரிடம் கலந்தாலோசித்து நிச்சயம் நாடாளுமன்றத்தில் பேசி ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு வர நடவடிக்கை எடுப்பேன். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.