பாலக்காடு கிராமத்துக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பாலக்காடு கிராமத்துக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது.
நாகூர்:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பாலக்காடு கிராமத்துக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது.
கூட்டநெரிசல்
நாகூர் அருகே பாலக்காடு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாகூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த மாணவ-மாணவிகள் காலையும், மாலையும் அரசு பஸ்சில் சென்று வருகின்றனர். இந்த கிராமத்துக்கு ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் கூட்டம் நெரிசலாக காணப்பட்டது.
மாணவர்கள் ஆபத்தான பயணம்
இதன் காரணமாக மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியப்படி ஆபத்தான பயணம் செய்தனர்.
எனவே பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 27-ந்தேதி வெளியானது.
கூடுதல் பஸ் இயக்கம்
இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துதுறை அதிகாரிகள் பாலக்காடு கிராமத்திற்கு கூடுதல் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் மாணவ-மாணவிகள், பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.