சீர்காழியில் இருந்து வடரங்கம் கிராமத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
‘தினத்தந்தி செய்தி எதிரொலியாக சீர்காழியில் இருந்து வடரங்கம் கிராமத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீர்காழி:
'தினத்தந்தி செய்தி எதிரொலியாக சீர்காழியில் இருந்து வடரங்கம் கிராமத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி நேரங்களில் கூட்டம் அலைமோதும்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வடரங்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு இடையில் சோத்திரியம், எலத்தூர், பணங்காட்டங்குடி, சோழியங்கோட்டம், கொண்டல், தேனூர், ஆதமங்கலம், வள்ளுவகுடி, மருதங்குடி, ஏனாக்குடி, நிம்மேலி, ஆலஞ்சேரி, அகனி, ராமாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், அரசு ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் தங்கள் கல்வி மற்றும் பணிக்காக சீர்காழிக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் இந்த பகுதியில் போதிய பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதுகின்றன. மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் அடிக்கடி கீழே விழுந்து விபத்துகளில்சிக்குகின்றனர்.
'தினத்தந்தி' செய்தி
இதையடுத்து சீர்காழியில் இருந்து வடரங்கம் கிராமத்துக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சீர்காழி கிளை மேலாளர் உத்தரவின்படி வடரங்கம் கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு பஸ் இயக்கப்பட்டது. மேலும் சென்னை மற்றும் புறநகர் செல்லும் மாற்று பஸ்களை வடரங்கம் வழிதடத்தில் இயக்கி மாணவ, மாணவிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் மாணவர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.