கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு


கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் இன்று குடியரசு தின விழா நடைபெறுவதையொட்டி, மாவட்ட முழுவதும் போலீசார் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் இன்று குடியரசு தின விழா நடைபெறுவதையொட்டி, மாவட்ட முழுவதும் போலீசார் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் அம்ரித் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குடியரசு தினத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கக்கனல்லா, நாடுகாணி, பாட்டவயல், முள்ளி, எருமாடு உள்பட 16 சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கூடுதல் சோதனைச்சாவடிகள்

வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் காட்டேஜ்களில் போலீசார் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு சந்தேகத்துக்கிடமான நபர்கள் வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விடுதி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ஊட்டியில் தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், சேரிங்கிராஸ், லவ்டேல் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் சில சோதனை சாவடிகளில் போலீசார், வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் நீலகிரி சர்வதேச சுற்றுலா தலம் என்பதால், அரசு விடுமுறை தினமான இன்று சுற்றுலா தலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story