திருந்திய நெல் சாகுபடி முறையை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
செங்கோட்டை பகுதியில் திருந்திய நெல் சாகுபடி முறையை கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் ஆய்வு செய்தார்.
செங்கோட்டை:
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் நீர்வளம் மற்றும் நிலவளம் என்ற திட்டத்தின் கீழ் சிற்றாறு உப வடிநில பகுதியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் வாயிலாக நெல் சாகுபடியில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், நீர் வளம் மற்றும் நிலவள திட்ட இயக்குனருமான ஜவகர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
செங்கோட்டை வட்டாரம் கலங்காதகண்டி கால்புறவில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். முன்னதாக செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் வரவேற்றார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) முகுந்தா தேவி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.