டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல்


டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல்
x

டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல்

திருப்பூர்

தளி

ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகே டாஸ்மாக் கடையில் மதுவாங்குபவர்களிடம் ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதல் தொகை வசூலிப்பு

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சார்பில் டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தருகின்ற அதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையை விடவும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மதுபிரியர்கள் அவதிக்கு உள்ளாகி வருவது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில் உடுமலையை அடுத்த ஒன்பதாறு சோதனைச் சாவடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தினசரி ரூ.5ஆயிரம் வருமானம்

இது குறித்து மதுப்பிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

டாஸ்மாக் கடை மூலம் மாநிலம் முழுவதும் மொத்தமாகவும் சில்லரையாகவும் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழைத்த களைப்பை போக்குவதற்காக சொற்ப சந்தோஷத்துக்கு ஆசைப்பட்டு கூலித் தொழிலாளர்கள் மதுபானத்தை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் கடைக்கு வருகின்ற கூலித்தொழிலாளர்களிடம் அங்கு பணிபுரிந்து வருகின்ற பணியாளர்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 மற்றும் ரூ.20 வீதம் தரத்திற்கு தகுந்தாற்போல் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் நாளொன்றுக்கு அந்த கடையில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாக தெரிகிறது.

இதனால் மதுப்பிரியர்களுக்கு மாதந்தோறும் கூடுதல் தொகை செலவாகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பணியாளர்களின் சட்ட விரோத செயல்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மீது அதிருப்தி நிலவி வருவதுடன் அவ்வப்போது மதுப் பிரியர்களுக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

கணிப்பொறி பில்

எனவே ஒன்பதாறு சோதனை சாவடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நடைபெறுகின்ற முறைகேட்டை தடுப்பதற்காக அங்கு அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் அலுவலக முகவரி அடங்கிய பதாகையை கடைக்கு முன்பாக வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திராவை போன்று மதுபாட்டிலுக்கு கணிப்பொறி மூலமாக பில் போட்டு தர வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்ற பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story