ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை


ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை
x

ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகையை மின் வாரியம் வசூல் செய்வதால், அதிக தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருச்சி

ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகையை மின் வாரியம் வசூல் செய்வதால், அதிக தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

வைப்புத்தொகை

தமிழக மின்வாரியம் வீடுகளில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கிறது. இந்த தொகை, மின் இணைப்பு பெறும் போது குறிப்பிட்டிருந்ததை விட கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் இணைப்புகளில் மட்டும் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலால் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு நுகர்வோர்களிடம் இருந்து கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி, ஏப்ரல் மாதத்துக்கு பதில் ஜூலை மாதம் தொடங்கியது.

அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, பலரின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பு கைவிடப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற விதியின் கீழ், இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணியை தொடங்க மின் வாரியம் முடிவு செய்தது. அதேசமயம், மின் கட்டணம் உயர்த்தி 6 மாதங்களே ஆனதால் அந்த முடிவு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

மின் பயன்பாடு அதிகரிப்பு

இந்தநிலையில், கடந்த மாத இறுதியில் மின் கணக்கீடு செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, மின் அளவீட்டுக்குரிய தொகையாக, அந்த நுகர்வோர் பயன்படுத்திய யூனிட்டுக்கு உரிய தொகையை மின் அட்டையில் குறித்துச்சென்றனர். கோடைகாலம் என்பதால் பலருடைய வீடுகளில் மின் பயன்பாடு அதிகமாகி கட்டணமும் அதிகரித்து இருந்தது.

பள்ளி திறக்கும் நேரம், பள்ளிக்கட்டணம், சீருடை, புத்தகம் வாங்குதல் என்று பல செலவுகளை திட்டமிட்டு இருந்த பொதுக்கள் இந்த கூடுதல் மின் கட்டணத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தனர். இந்தவேளையில் வீட்டு உபயோக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு கூடுதல் வைப்பு தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வைப்புத்தொகை வசூலிப்பு

கடந்த வாரம் முதல் வீடுகளில் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி தொடங்கி உள்ளது. எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற விவரம், இந்த மாதம் மின்கட்டணம் செலுத்தும் போது தான் பலருக்கு தெரியவருகிறது. ஆன்-லைனில் பணம் செலுத்தும்போது, 1600 ரூபாய் மின்கட்டணம் குறிக்கப்பட்டவர்களுக்கு வைப்புத்தொகையுடன் சேர்த்து 2,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்று காட்டுகிறது. மின்சார வாரியத்துக்கு நடப்பு மாதம் அதிக தொகை செலுத்த வேண்டியிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, மின் இணைப்பு பெறும்போது குறிப்பிட்டிருந்ததை விட அதிக மின்சாரம் பயன்படுத்துவோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படுகிறது. மின்சாரம் வேண்டி விண்ணப்பிக்கும் போது தெரிவித்த மின் உபயோகத்தை காட்டிலும் கூடுதலாக உபயோகம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த வைப்புத்தொகை கடைசி ஓராண்டில் பயன்படுத்திய மின்சார கட்டணத்தின் சராசரியை கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றனர்.


Next Story