வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிப்பு


வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிப்பு
x

திண்டுக்கல்லில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களிடம் கூடுதல் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் நேற்று முதல் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் கூடுதல் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் நகரின் முக்கிய வீதிகளில் நேற்று காலையில் இருந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கூடுதல் அபராத கட்டணம் விதித்தனர். நேற்று மட்டும் ஹெல்மெட் அணியாத 70 பேருக்கு தலா ரூ.1000 கூடுதல் அபராத கட்டணமாக விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், மத்திய அரசு அபராத கட்டணத்தை உயர்த்தியது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் கூடுதல் அபராத கட்டண விவரங்கள் அச்சிடப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றனர்.


Next Story