சித்திரை திருவிழா பாதுகாப்பு பணிகளில் கூடுதல் போலீசார்- அமைச்சர்கள் தகவல்
சித்திரை திருவிழா திருவிழா பாதுகாப்பு பணிகளில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.
சித்திரை திருவிழா திருவிழா பாதுகாப்பு பணிகளில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
மதுரை சித்திரை திருவிழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் சரவணன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:- மதுரை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான சித்திரை பெருவிழா தொடங்கி உள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும், கள்ளழகர் எதிர்சேவை 4-ந் தேதியும், வைகை ஆற்றில் எழுந்தருளல் 5-ந் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வின்போது கூட்ட நெரிசலின் காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழப்பு போன்ற வருந்தத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. இத்தகைய சம்பவங்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். அதற்கேற்றாற்போல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்திட வேண்டும். குறிப்பாக, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வாகன நிறுத்தம், மக்கள் திரள் ஆகியவற்றை முறைப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதிய சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளையும் அதிகரித்திட வேண்டும்.
குடிநீர் வசதி
அதேபோல, மீனாட்சி -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்வில் பங்கேற்பதற்கு வழங்கப்படும் அனுமதி அட்டையை முறையே பரிசோதித்து அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே அனுமதித்திட வேண்டும். இதில் பாகுபாடு இருக்கக்கூடாது. தேரோட்ட நிகழ்விற்கு முன்பு தேரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணித்துறையின் சான்றிதழ் பெறவேண்டும். தேர் செல்லும் வழி, கள்ளழகர் ஊர்வலம் வரும் வழிகளை முறையே கண்காணித்து தாழ்வான மின் கம்பிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.
பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய மருத்துவக்குழுக்கள் அமைத்திட வேண்டும். பெரிய ஆஸ்பத்திரி நிர்வாகம் தயார் நிலையில் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். சித்திரை திருவிழாவை மிகச்சிறப்புடன் நடத்த அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம், கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.