கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு
கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 293 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 847 கனஅடி தண்ணீர் வெளியிடப்பட்டது. அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது. திருச்சி மாவட்டம் மேலணை என்ற முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் 4,1112 கனஅடியும் கொள்ளிடத்தில் 83,299 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கொள்ளிடத்தில்...
கல்லணையில் இருந்து காவிரியில் 7,003 கன அடியும், வெண்ணாற்றில் 7,004 கன அடியும், கல்லணைக்கால்வாயில் 2,513 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் கூடுதலாக 15 ஆயிரத்து 353 கன அடி திறந்து விடப்படுகிறது. முக்கொம்பிலிருந்து திறந்து விடப்படும் 83 ஆயிரத்து 299 கன அடி தண்ணீர் சேர்ந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும்போது கொள்ளிடம் ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக மேட்டூர் அணைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி அதிகபட்சமாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 311 கன அடி தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கொள்ளிடம் ஆற்றில் ஜூலை மாதத்தில் இருந்தே அதிக அளவில் தண்ணீர் செல்வது குறிப்பிடத்தக்கது.