மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் கூடுதல் தண்ணீர் திறப்பு-அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் கூடுதலாக தண்ணீர் திறக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி:
பாசன கால்வாய்
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட சதாசிவம் எம்.எல்.ஏ. பேசும் போது, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் தற்போது தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் கூடுதலான அளவில் தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் கால்வாய் பாசன பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அடுத்த வரும் 10 நாட்களுக்கு மேட்டூர் அணை பாசன கால்வாய்களில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கும் பட்சத்தில், இந்த பகுதி விவசாயிகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் உற்பத்தி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு பேசும் போது, எம்.எல்.ஏ.வின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மூலம், சம்பந்தப்பட்ட துறை பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் சில நாட்களுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதை அந்த பகுதி விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.
புகழ்ச்சி
முன்னதாக சதாசிவம் எம்.எல்.ஏ. பேசும்போது, சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு கட்சி பாகுபாடு இன்றி செயல்படுவதாகவும், அவரின் பணிகளை பாராட்டி வெகுவாக புகழ்ந்து தள்ளினார். அவரது பேச்சை இடைமறித்த அமைச்சர் கே.என்.நேரு அதிகம் புகழாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள். உடனடியாக செய்து தருகிறேன் என கூறியவுடன் கூட்டத்தில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு பேசுகையில் அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு பா.ம.க.வினர் தி.மு.க.வுடன் இப்படி நல்ல உறவுடன் இருந்தால் பரவாயில்லை என சிரித்துக் கொண்டே கூறினார்.