பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்,
கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர்
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கி இருக்கிறார்கள். சுசீந்திரம், பறக்கை, தேரூர், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாற்று விதைக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த நிலையில் கன்னிப்பூ சாகுபடிக்காக வழக்கம் போல கடந்த 1-ந் தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதே சமயம் பெருஞ்சாணி அணையில் இருந்தும் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு பெருஞ்சாணி அணையில் இருந்துகூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது.
படிப்படியாக மற்ற கால்வாய்களில்...
அதாவது பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 61 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் பாசனத்துக்காக வினாடிக்கு மொத்தம் 211 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது தோவாளை மற்றும் அனந்தனார் கால்வாய்களில் செல்கிறது. படிப்படியாக மற்ற கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பேச்சிப்பாறை அணை நேற்று காலை நிலவரப்படி 40.46 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 103 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போல பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 41.25 அடியாக உள்ளது.