பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து உரிய நடவடிக்கை -அமைச்சர் நாசர் தகவல்
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.), சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), பிரின்ஸ் (காங்கிரஸ்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்பாகவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர்.
இதற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதில் அளித்து கூறியதாவது:-
கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றிற்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் அரசுக்கு ஒரு கோடியே 5 லட்சம் இழப்பு ஏற்பட்ட போதிலும் மக்கள் சேவைக்காக அரசு அதை தொடர்ந்து வருகிறது.
உரிய நடவடிக்கை
பசும்பால் லிட்டருக்கு ரூ.35-ம், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 வீதம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பால் உற்பத்தியாளர்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7 உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்து உள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும்.
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தற்போது பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி வழக்கம்போல் தொடர்ந்து பால் வழங்கி வருகிறார்கள். இங்கே உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய விஷயங்கள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடைகளுக்கான அரிய வகை நோய் பல மாநிலங்களில் பரவி வருகிறது. அதை தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.