கொசுக்களை ஒழிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன


கொசுக்களை ஒழிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன
x

கொசுக்களை ஒழிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை

கொசுக்களை ஒழிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொசுக்களால் பாதிப்பு

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கொசுவால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா உள்ளிட்ட பலவிதநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை இல்லை. எனவே, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அதிக திறன் கொண்ட மருந்துகளை பயன்படுத்தி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

கொசு கட்டுப்பாட்டு மையத்தில் நிரந்தர ஊழியர்களை நியமிக்கவும், டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா உள்ளிட்ட கொசுவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து வசதிகளுடன் தனி வார்டு வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பல்வேறு நடவடிக்கைகள்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, நல்ல தண்ணீரிலும், கழிவுநீரிலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் கொசு ஒழிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கெடுதல் தராத கொசுக்கள் மற்றும் சுற்றுச்சூழலை காக்கும் கொசுக்களை கண்டறிந்து இதர கொசுக்கள் அழிக்கப்படுகின்றன.

குஞ்சு உற்பத்தியாகும் நிலையிலேயே அவை அழிக்கப்படுகிறது. இதற்கான பணிகளில் தற்காலிக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா பாதிப்பிற்கு தேவையான அனைத்து வகை முன்னெச்சரிக்ைக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உயிர் காக்கும் மருந்துகள், கருவிகள், ரத்த பிளேட்லெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அவசர வார்டு வசதி உள்ளன என்றார்.

வழக்கு முடித்துவைப்பு

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொசு ஒழிப்பிற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று தமிழக அரசை அறிவுறுத்தினர். பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story