பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.


பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
x

பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு யூனியனில் உள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பெரிய அளவில் நடந்து வருகிறது. தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் வாழைத்தார் பயிர் செய்துள்ளனர். வாழை நடவு செய்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திடீரென்று வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால், வாழை இலைகள் சீக்கிரமாகவே மஞ்சள் நிறமாகி, பழுத்து வீணாகி விடுகின்றன. இந்த நோய் பாதிப்பால் வாழைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வாழைத்தார்களும் திரட்சியாக இருக்காது. இதனால், வாழை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். ஒரு வாழையை உற்பத்தி செய்த செலவுக்கூட கிடைக்காமல் போய்விடும். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நோய் பாதிப்பு வாழைகளில் ஏற்பட்டு இருப்பதால், அனைத்து வாழை விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியது இருக்கிறது. இதை தவிர்க்க, இலைக்கருகல் நோயால் வாழை பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டரும், இலைக்கருகல் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story