ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா


ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா
x

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழாவையொட்டி மூவாற்றுமுகம் ஆற்றில் சாமிக்கு ஆராட்டு நடந்தது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழாவையொட்டி மூவாற்றுமுகம் ஆற்றில் சாமிக்கு ஆராட்டு நடந்தது.

வைணவ திருத்தலம்

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பாம்பணை மீது பள்ளிகொண்டு மூன்று வாசல்கள் வழியாக பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

கும்பாபிஷேகம் நடந்த பின்னர் நடக்கும் முதலாவது பங்குனித் திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் ஹரி நாம கீர்த்தனம், நாராயண பாராயணம், கதகளி, திருவாதிரைக்களி, பரதநாட்டியம், சாமி பல்லக்கு, நாற்காலி உட்பட பல்வேறு வாகனங்களில் பவனி வருதல், சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

பள்ளி வேட்டை

விழாவில் நேற்று முன்தினம் இரவு ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு சென்று திரும்புதல் நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று காலை திருவிலக்கம் நடைபெற்றது. பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் கோவில் கிழக்கு வாசல் வழியாக ஆராட்டுக்கு எழுந்தருளினர். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்தனர். பின்னர் ஆராட்டு ஊர்வலம் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி, வாள் ஏந்தி முன் செல்ல சாமிகள் மேற்கு வாசல், தற்காலிக பாலம், ஆற்றூர் கழுவன் திட்டை சந்திப்பு, தோட்டவாரம் வழியாக மூன்று நதிகள் சங்கமிக்கும் மூவாற்றுமுகம் ஆற்றுக்கு சென்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுக வரவேற்பு அளித்தனர்.

ஆராட்டு

தொடர்ந்து மூவாற்றுமுகம் ஆற்றில் ஆராட்டு நடந்தது. ஆராட்டு முடிந்த பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிகள் கருடவாகனத்தில் எழந்தருளி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார், நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story