ஆடி 2-வது வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி 2-வது வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

ஆடி வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று அம்மனை வழிபடுவார்கள். கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். இந்தாண்டு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இந்த நிலையில் ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனை தரிசிக்க நேற்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடினர். பின்னர் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

இதே போன்று குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் சாமி தரிசனம் செய்தனர். குமாரசாமிபட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு வளையல் மற்றும் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பெரமனூர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சேலம் அய்யந்திருமாளிகை மாரியம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு மீனாட்சி திருக்கல்யாண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதே போன்று நெத்திமேடு, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story