ரூ.5.2 கோடியில் கட்டப்படும் ஆதிதிராவிட மாணவர் நல விடுதி; அமைச்சர் ஆய்வு


ரூ.5.2 கோடியில் கட்டப்படும் ஆதிதிராவிட மாணவர் நல விடுதி; அமைச்சர் ஆய்வு
x

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.5 கோடியே 2 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிட நல மாணவ-மாணவிகள் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.5 கோடியே 2 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிட நல மாணவ-மாணவிகள் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

மாணவர் விடுதி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் தாட்கோ மூலம் ரூ.2 கோடியே 51 லட்சம் செலவில் ஆதிதிராவிட மாணவர் விடுதியும், வடக்கு பரும்பூரில் மாணவிகளுக்கு தாட்கோ மூலம் ரூ.2 கோடி 51 லட்சம் செலவில் ஆதிதிராவிட மாணவி விடுதியும் கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி மாணவ-மாணவிகளின் நிலைமையை கருத்தில்கொண்டு தரமான முறையில் விரைவாக கட்டிமுடிக்க ஒப்பந்ததாரரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அப்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி ஆதிதிராவிட நல துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளையும், விடுதிகளையும் தற்போது ஆய்வு பணியில் ஈடுபட்டுகொண்டு இருகிறோம். அந்த வகையில் ஓட்டப்பிடாரத்தில் தாட்கோ மூலம் இரண்டு விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் கட்டிடம் முழுமையாக முடிந்து மாணவ-மாணவிகளுக்கு பயன்பாட்டிற்கு வரும்.

நிதிஉதவி

320 பழங்குடியினர் பள்ளிகளும், 1,138 ஆதிதிராவிட நல பள்ளிகளும் கடந்த ஆட்சியில் சரிவர பராமரிக்காத நிலையில் இருந்ததை முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்த முறை அனைத்து பணிகளிலும் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஆதி திராவிட நலப்பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக படிப்பிற்கு பணம் செலுத்த முடியாமல் பள்ளிகளை விட்டு நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிதியுதவி செய்ய முதல்-அமைச்சரிடம் அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆய்வின் போது கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாட்கோ செயற்பொறியாளர் பால்ராஜ், தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அழகு, பஞ்சாயத்து தலைவர்கள் இளையராஜா, அருண்குமார், ஜெயந்தி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story