ஆதிதிராவிடர்-பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர்-பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு (எச்.பி.) ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி. மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான 10 சதவீத பயனாளி பங்கு தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்.பி.க்கு ரூ.27 ஆயிரமும், 10 எச்.பி.க்கு ரூ.30 ஆயிரமும், 15 எச்.பி.க்கு ரூ.40 ஆயிரமும், அதற்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்கு தொகை திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்கு தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாயிகள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும், பழங்குடியினர் விவசாயிகள் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், அ-பதிவேடு, கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.